சீனத் தடுப்பூசியில் அரசு பாரிய மோசடி! மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் – சஜித் அறிக்கை!*
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனாத் தடுப்பூசித் திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என்ற அடிப்படையில் 14 மில்லியன் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ள போதிலும் பங்களாதேஷ் குறித்த தடுப்பூசியை 10 டொலர்களுக்குப் பெற்று கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி குறித்த தடுப்பூசி கொள்வனவின்போது 70 மில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம் முதலே ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டில் 60 வீதமானவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமானால் நாட்டுக்கு மொத்தமாக 30 மில்லியன் (3 கோடி ) கொரோனாத் தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், அரசு கடந்த 5 மாதங்களில் 3 மில்லியன் (30 இலட்சம்) தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி நாட்டுக்கு மேலும் 27 மில்லியன் (இரண்டு கோடி 70 இலட்சம்) தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கும் சிறிய அளவு தடுப்பூசிகளையும் அரசில் உள்ள சிலர் தமது பதவிப் பலத்தைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துவரும் நிலையில் பொதுமக்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களிடையே 10 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும், இலங்கையில் அந்தப் பரிந்துரை மீறப்பட்டுள்ளது.