அண்மையில் மறைந்த, ஈழத்து இசையுலகின் முடிசூடா மன்னன், சங்கீதபூஷணம் செல்லத்துரை குமாரசாமியின் 31 ஆவது நாள் நினைவேந்தலும், “வரத சரிதம்” நூல்வெளியீடும் நேற்று (செப்ரெம்பர் 16) உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், “யாழ்ப்பாணத்தின் பெருமளவு ஆலயங்களின் சிறப்பைப் பாடிய பக்தியின் குரலாகவும் எம் எல்லோரது மனங்களிலும் நிறைந்திருந்த ‘ஈழத்தின் சீர்காழி’ என்றழைக்கப்படும் மாமனிதர் குமாரசாமி ஐயாவின் மறைவென்பது ஈழத்து இசைத்துறையினது மாமேதையின் மறைவாக, அத்துறையில் ஓர் பேரிடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது “ என தெரிவித்துள்ளார்.
அந்நினைவுரையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது; யாழ்ப்பாணத்தின் கலைப் பாரம்பரியத்தில் கனதிமிகு இடத்தைப் பெறும் கரவெட்டி மண்ணைப் பூர்வீகமாகக்கொண்ட இவரது குடும்பம் இயல்பிலேயே இசைக்கலையின்பால் நாட்டமுள்ள குடும்பமாகவே இருந்திருக்கிறது.
அத்தகு குடும்பப் பின்னணியின் தாக்கமிகுதியால் இளவயதிலேயே இசை மீதும் கலை மீதும் ஆர்வம் மிகுந்திருந்த இவர் அத்துறை சார்ந்தே தனது கல்வி, தொழில், வாழ்க்கைமுறை என அத்தனையையும் கட்டமைத்திருந்தார்.
தமிழகம் சென்று முறையாக சங்கீதம் கற்றதோடன்றி, தன் சொந்த மண்ணில் அக்கலையை முறையாக அரங்கேற்றம் செய்த பெருமைக்கும் உரியவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உதவி விரிவுரையாளராகவும், பிரதி அதிபராகவும் கடமையாற்றியதோடு, கரவெட்டி தொலைக்கல்வி நிலையத்தின் இசைப் போதனாசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் வருகை விரிவுரையாளராகவும், வட இலங்கை சங்கீதசபையின் தேர்வு நெறியாளராகவும் என தான் வகித்த அத்தனை பதவிகளுக்கும் அணிசெய்த இசைத்துறைப் பேராளுமை இவர்.
ஒரு சமூகத்தின் அக உணர்வுகளை, அகப்புறச் சூழலின் தாக்கங்களை, யதார்த்தப் புறநிலைகளை, காலப்பிரவாகத்தை, வரலாற்றை, கடந்துவந்த பாதைகளை, அச்சமூகத்தின் உண்மை உணர்வுகளை பதிவுசெய்வதிலும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் அடிமுறை பிறழாது கடத்துவதிலும் கலை எனும் ஊடகமே முன்னணி வகிக்கிறது.
அந்த அடிப்படையில், எமது மக்களின் தேசவிடுதலைக் கனவைச் சுமந்து நிகழ்ந்தேறிய போரின் தாற்பரியத்தை, அதன்பாலிருந்த நியாயத்தை, அடக்குமுறையாளர்களால் எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களை வெளிக்கொணரும் பணிக்கு கால்கோலாக இருந்த “தமிழீழ எழுச்சிப் பாடல்களின்” மறக்கவியலாத குரலாக குமாரசாமி ஐயாவின் குரல் ஈழத்தமிழர்களின் மனங்களெங்கனும் நிறைந்தே இருக்கும் என்பது நிதர்சனம்.
ஒரு தலைமுறை தாண்டிய இசை விற்பன்னர்களை, சங்கீத ஆசிரியர்களை ஈழக் கலையுலகுக்கு உற்பவித்து, அண்மையில் மறைந்த இந்த மண்ணின் கலைஞர், “மாமனிதர்” செல்லத்துரை குமாரசாமி ஐயாவுக்கு எனது புகழ் அஞ்சலிகள் – என்றார்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் கா.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், வரத சரிதம் நூலின் வெளியீட்டுரையை வடக்குமாகாண முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.அனந்தராஜ் அவர்களும், மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வேல்நந்தகுமாரும் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில், வடக்குமாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளருமான சத்தியசீலன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் தருமலிங்கம், வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ், கரவைக்குமரன் அமரர்.குமாரசாமி அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.