கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்தை தடுப்பதற்கு இன்றிலிருந்து மாவட்டத்தின் A9 பிரதான வீதியூடாக கனரக வாகனங்கள் வீதியில் பயணிக்கின்ற நேரத்தில் புதிய நடைமுறையை அமுல்ப்படுத்துவது தொடர்பில் இன்று(ஒக்ரோபர் 27) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை நாட்களில் காலை 7.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரையும், பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரையும் முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை உட்பட பரந்தன் சந்தி வரையான வீதியில் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டத்தினுள் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கான நேரவரையறை காலை 7.00மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை வரையறுக்கப்பட்டிருந்தது. ஆயினும் தற்போது மேற்குறிப்பிட்ட புதிய நடைமுறையின் காரணமாக காலை 8.00 மணி முதல் அவற்றை பயனிக்க அனுமதி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட நேர எல்லைக்குள் ஏனைய வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு 40 கி.மீ ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
குறித்த விதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். மேலும் நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், இராணுவ – பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.