எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத, ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –
வாலிப வயதின் வசீகரக் கனவுகளை வெறுத்து உரிமையுடன் வாழத்துடிக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடியலுக்காக தன்னையே தந்தவர், உறுதியின் உறைவிடம், உணர்வின் ஊற்றிடம், அஞ்சுதல் அறியா நெஞ்சுரன் அவர்.இதை நான் நேரில் கண்டவன்,
பனாகொடை படைமுகாமில் கைதாகி அவரும் நானும் இருந்த வேளை எனக்கு நடந்தது போலவே அவருக்கும் வதைகள் நடந்தன. நேசித்த மக்களுக்காக நாமிருவரும் வலிகளை சுமந்த வேளை நெஞ்சுரம் அவரிடம் கண்டேன்.
இது படை முகாம், எம்மை சிறைசாலைக்கு மாற்றுங்கள்!. என்ற கோரிக்கையை முன் வைத்து நாமிருவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலில் வதை முகாமிற்குள் இருந்தே போராட்டம் நடத்தும் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தவர்கள்,..
அதன் போது என்னுடன் சேர்ந்து அவர் எதிர் கொண்ட சவால்களை எண்ணிப்பார்க்கிறேன்,.. வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டோம்,. 83 இல் அங்கொரு இரத்த வேள்வி நடந்தது,.
கொன்று பலியாக்கப்பட்ட சக கைதிகளின் சடலங்களின் மத்தியில் எழுந்து நின்று சாவா வாழ்வா என்று போராடி உயிர் பிழைத்தோம்.
எஞ்சிய கைதிகளையும் காப்பாற்ற என்னுடன் சேர்ந்து வீரத்தின் விளை நிலமாக அவர் களமாடி நின்ற காட்சிகளை கண்டேன்,..
ஒரு சிறகசைப்பில் மட்டு நகர் சிறையுடைத்தோம். இது வெறும் வீரப்பிரதாபம் அல்ல., அறிவாயுதம் எமக்கு துணை நின்ற விவேகத்தின் அடையாள வெற்றி.
நெடு நாள்கள் உள்ளிருந்தே திட்டமிட்டு நாம் மட்டுநகர் சிறையுடைத்து வெளியே வந்தோம். அதில் தோழர் மகேஷ் அவர்களும் ஒருவர்.
உணர்வால் ஒன்று பட்டாலும், அவர் வேறு திசையிலும் நாம் வேறு திசையிலும் வெளியே சென்றிருந்தோம்,..
கொள்கை ஒன்று, ஆனாலும் கோட்டைகள் இருவேறு,. உரிமை போராட்ட களத்தில் அவர் தமிழ் ஈழ இராணுவம் என்ற அமைப்பின் சார்பிலும் நான் எனது ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் சார்பிலும் எமது நீதியான உரிமைப்போராட்ட களத்தில் நின்றிருந்தோம்..
சகோதரப்படு கொலைகளாலும், அளவிற்கு மிஞ்சிய அர்த்தமற்ற அழிவுகளாலும் எமது உரிமைப்போராட்டம் நலிவுற்றிருந்த வேளை இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு உருவானது,..
தீர்க்க தரிசனமாக அதை ஏற்றுக்கொண்டோம். தேசிய நல்லிணக்க வழியில் செல்ல ஆரம்பித்தோம்,..
போராட்ட களத்தில் சாகச வீரனாக பார்க்கப்பட்ட தோழர் மகேஷ் இந்திய சிறையிலும், தென்னாபிரிக்க சிறையிலும் கைதாகி இருந்த வேளை யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை,..
எனக்கிருக்கும் தார்மீக கடமையை புரிந்து கொண்ட தோழர் மகேஷ் என்னுடன் தொடர்பு கொண்ட போது,..அவர் தாயகம் திரும்ப உதவினேன்,. இற்றோடு என் கடமை முடிந்தது நீங்கள் விரும்பிய ஜனநாயக அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்கலாம் என்றேன்.
ஆனாலும் அவர் எமது தேசிய நல்லிணக்க வழிமுறையை தேர்ந்தெடுத்தார், எம்முடன் இணைந்தார்.
பன்மொழி ஆளுமையாக, பன்முக சிந்தனையாளனாக,.. இராஜதந்திர பேச்சாளனாக,.. ஊடக சந்திப்புகளில்,.. அரச உயர் மட்ட பேச்சுகளிளில்,..தென்னிலங்கை கட்சிகள்,. மற்றும் வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்புகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
தேர்தல் பரப்புரை மேடைகளில் மட்டுமன்றி,. கிராமங்கள் தோறும் மக்களை தேடிச்சென்றும் எமது கட்சியின் அறம் சார்ந்த உண்மைகளை எடுத்துரைத்தார்.
உடல் தளர்ந்தாலும், உணர்வு தளராமால், இறுதிவரை என்னுடன் உரையாடி தோழர் நலமா? என்றென அவர் என்னிடம் கேட்கும் குரல் என்றும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்,..
தோழர் மகேஷ் அவர்களின் கல்லறையின் காதோரம் அவர் எண்ணிய கனவுகள் ஈடேறிய நல்ல சேதி விரைவாக வந்தடையும்..
வலிமை மிக்கவர்கள் செயற்கை மரணங்களை வெல்ல முடியும்,. இயற்கை மரணங்களை எந்த வலிமையும் வெல்ல முடியாது,.. தோழர் மகேஷ் அவர்களுக்கு எனது அஞ்சலி மரியாதை! என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.