குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இதற்கு முன்னர் தனித்தனியாக உறுப்புகள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சந்தன கஞ்சங்கமுவ தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லீரல் மற்றும் கண் சவ்வுகள் என்பன மூன்று பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், , விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 5 உறுப்புகள் மூலம் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.