இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் ‘தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது – ரணில்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,

ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சியின் செயல்திறன் மிகவும் முக்கியமானது. ஆனால் எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து, தனிநபர்களைச் சுற்றியே அரசியல் தீர்மானிக்கப்படும். இருப்பினும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது. எதிர்க்கட்சியாக பரந்துபட்டுச் செயல்படாமல், சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்றனர். உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர்.

உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு நான் இணங்கமாட்டேன் என்று கருதுகின்றனர். அவ்வாறில்லை. அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டால், கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி உள்ளது.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து போகலாம். இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் ‘தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது. உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விட, தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு காலகட்டம் வரும் என்றார்.

Share this Article