இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாலியல் பரவும் வைரஸ்களில் எச்.ஐ.வியும் முக்கியமானதாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதித்து, சிறிய நோய்களுக்குக் கூட எதிர்ப்பு தர முடியாத நிலையில் உடலை பலவீனப்படுத்துகிறது. இதனால், சாதாரண இருமல் அல்லது சளி போன்ற நோய்களே கூட உயிரிழப்புக்கு காரணமாகலாம்.

சுகாதார அதிகாரிகள் எச்.ஐ.வி பரவும் மூன்று முக்கிய வழிகளை சுட்டிக்காட்டியுள்ளனர்:

  1. பாதுகாப்பற்ற உடலுறவு – எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்வதால் வைரஸ் பரவும். முத்தமிடுவதால் நோய் பரவாது, ஆனால் பாலியல் ரீதியான (குறிப்பாக ஆசன வழி) உடலுறவு முக்கிய காரணமாகும். பாதுகாப்பற்ற உடலுறவின் பின்னர் 72 மணிநேரத்துக்குள் வைரஸ் உடல் முழுவதும் பரவக்கூடும்.

  2. ஊசிகளின் பகிர்வு – போதைப்பொருள் பயன்பாட்டில் ஒரே ஊசியை பலர் பகிர்ந்து பயன்படுத்துவதால் எச்.ஐ.வி எளிதில் பரவுகிறது.

  3. தாயிலிருந்து குழந்தைக்கு பரவல் – எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கும் வைரஸ் பரவக்கூடும்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி,

  • 2021 இல் 411 நோயாளர்கள்

  • 2022 இல் 607 நோயாளர்கள்

  • 2023 இல் 697 நோயாளர்கள்

  • 2024 இல் 824 எச்.ஐ.வி நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்; ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம் சுமார் 7:1 ஆகும்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கண்டறியப்பட்ட புதிய நோயாளர்களை சேர்த்துக் கொண்டால், இலங்கையில் மொத்தம் 6,740 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 824 புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து வந்தவையாகும். அதே ஆண்டில் 47 பேர் எயிட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இலங்கை தற்போது குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், புதிய தொற்றுகளின் வருடாந்திர உயர்வு கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய எச்.ஐ.வி சோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்கள் வழியாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

மேலும், எயிட்ஸ் தொடர்பான தகவல்கள் அல்லது சிகிச்சைகள் குறித்து அறிய விரும்புபவர்கள் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி இலக்கம் (+94 703 733 933) மூலம் தொடர்புகொள்ளலாம்.

Share this Article