இலங்கை நாணயப் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், அதன் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது என்று நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் இந்த மாதம் குறைவடையவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தத் தகவலை வழங்கியுள்ளனர்.
உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் ஏறத்தாழ 15 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று இரவு 9 மணிக்கு முன்னதாக புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.