யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கித் தோட்டா தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்குக் காரணம் என அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்பவரது உடற்கூற்றுப் பரிசோதனை, யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் இன்று (10/02) நடைபெற்றது.
பொலிஸார் பயன்படுத்திய துப்பாக்கியின் சன்னம் சிறுவனின் நெற்றிப் பகுதியில் பட்டுத் தலையை ஊடுருவியுள்ளது.

அவ்வாறு ஊடுருவிய ரவை, மூளையை நேரடியாகத் துளைத்துச் சென்றதால் ஏற்பட்ட பாரிய பாதிப்பு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததாகக் கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது வாகனத்திற்குள் இருந்தவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்