கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒரு பொறுப்பு வாய்ந்த அரச வைத்திய அதிகாரியாக இருந்துகொண்டு, உரிய அனுமதியின்றி பல்வேறு ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமை, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்தமை, முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், அரச சேவை விதிமுறைகளை மீறியமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வைத்தியர் ருக்ஷான் பெல்லன, உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக முறையான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.