அதிபர், ஆசிரியர் இடமாற்றக் கொள்கை திருத்தம் , அங்கீகாரம் கிடைத்ததும் நடைமுறைக்கு!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08) புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாகாணத்தில் 3,304 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1,411 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றுள் தற்போது 336 வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

கல்வி, கலாசார மற்றும் விளையாட்டுத் திணைக்களங்களின் தனித்தனி முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஆளுநர் பாராட்டுத் தெரிவித்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, ஆசிரியர்களின் சுயவிவரக் கோவை இற்றைப்படுத்தலுக்கான நடமாடும் சேவையின் முன்னேற்றங்கள் மற்றும் வலய ரீதியாகத் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் குறித்துக் கவனமெடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இத்தகைய நடமாடும் சேவையை மீண்டும் நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அதிபர் சேவைக்கான இடமாற்றக் கொள்கை திருத்தப்பட்டு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான இடமாற்றக் கொள்கை தொடர்பில் சங்கங்களுடன் மீண்டும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் தனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக அனுமதி வழங்கப்படுமென்றும், அதன் அடிப்படையில் இடமாற்ற விண்ணப்பங்களைக் கோரிச் செயற்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தைக் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து மாதிரிச் செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியால் சாதாரண தர மாணவர்களுக்காக நடத்தப்படும் இணையவழி வகுப்புகளில் பாடசாலைகள் ஆர்வம் காட்டாமை குறித்தும் ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாகப் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் இயங்குவதை முழுமையாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி, பொறியியல்), மாகாண கல்விப் பணிப்பாளர், கலாசாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment