அடுத்த ஆண்டு முதல் புலமைப்பரிசில் பரீட்சையில் பாரிய மாற்றம்: வகுப்பு செயற்பாடுகளுக்கு 30% புள்ளிகள் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் (ஜூன் 16) தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Article