தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளரின் அனுமதியுடன் வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்க முடியாது, அவ்வாறு சில சபைகள் நடந்துகொண்டால் அதை மாற்றவேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று (19.12) கைதடியிலுள்ள உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் இவ்வாறு வலியுறுத்தியதுடன் மேலும் கூறுகையில் –
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கானது. ஆனால் சில சபைகளில் அது தவிசாளர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.
இதேநேரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் தவிசாளரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இது அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகும்.
நாம் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் தகவல்களை வழங்கப் பயப்படத் தேவையில்லை.
இவ்வாறான சட்ட முரணான தீர்மானங்களை அனுமதிக்க முடியாது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.