ரூ.3,000 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி – முன்னாள் பெண் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாத்தறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் மாத்தறை வைத்தியசாலை கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல கூட்டுறவுச் சங்கங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் பிரதான பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (20/11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் பிரதான பரிசோதகர் வருணி போகஹவத்த அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து காணொளி தொழிநுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஏனைய நான்கு சந்தேகநபர்களும் மாத்தறை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் இந்தச் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என்றும் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் வசமிருந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என்பதை அவர்களால் தெளிவுப்படுத்த முடியாமை மற்றும் குறித்த வாகனங்களுக்கான தவணைக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்குக் கூட்டுறவு சங்கங்களின் நிதி பயன்படுத்தப்பட்டமை ஆகியவை பிரதாக குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்களின் வசமிருந்த 12 வாகனங்களுக்கும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்துடன் குறித்த வாகனங்களின் பொறுப்பாளராக தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article
Leave a comment