சென்னை – கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75) உடல்நலக்குறைவால் இன்று (19/11) பிற்பகல் காலமானார்.
தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தவர் இவராவார்.
கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவக் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சுமார் 70 நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
இதையடுத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இன்று மதியம் 2.24 அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த இரு வாரங்களாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாததால், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இது தொடர்பாக அறிக்கை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் தி.மு.க.வில் பயணித்த வி.எஸ். பாபு, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், இந்த ஆண்டு (2026) பெப்ரவரி 7ஆம் திகதி த.வெ.க.வில் இணைந்தார்.
நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட அவர், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முதலமைச்சராக இருந்தவரையே வீழ்த்தியதால், த.வெ.க. அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
வி.எஸ். பாபுவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகள் வெற்றிடமாக உள்ள நிலையில், அவற்றுடன் சேர்த்து கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.