பாதீட்டின் பின் தொழிற்சங்கங்களின் கோரிக்கையில் அரசு கவனம்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வரவு – செலவுத் திட்டத்துக்குப் பின்னர் அரசின் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (17/11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அதற்கமைய செய்யக்கூடிய அனைத்துக் காரியங்களையும் விரைவில் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…

“தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுத்துக் கவனத்தில் கொள்கிறது. அவற்றை செவிமடுக்கிறோம்.

செய்யக்கூடிய விடயங்களை விரைவில் செய்கிறோம். ஆனால், இவ்வாறான எந்தவொரு ஆர்ப்பாட்டமும், பணிப்பகிஷ்கரிப்பும் இல்லாத காலத்தில் 2025 பெப்ரவரி மாதத்தில் அரசாங்கமாகத் தீர்மானித்து மிக உயர்ந்த சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

அதற்கமைய 2027 ஜனவரி மாதத்தில் அனைவரதும் வீட்டுக்கு கொண்டு செல்லும் சம்பளம் அதிகரித்துள்ளது. அது நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த மிக உயர்ந்த சம்பளத் தொகையாகும்.

2027ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறவிருக்கும் சம்பளத்திற்குரிய மேலதிக நேரம், விடுமுறை தினப் படிகள், மேலதிக கடமைகள் உள்ளிட்ட படிகளையும் 2025 ஏப்ரல் மாதம் முதல் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். 2027 ஜனவரி மாதத்திலும் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதால், வேண்டுமென்றால் இவற்றில் எதையுமே வழங்காமல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்திருக்கலாம்.

ஆனால், பல துறைகளில் பிரச்சினைகள் உள்ளன, அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்க்க முடியாது என நாங்கள் யோசிச்சோம்.

அதனால்தான் இந்தத் தருணத்தில் சில துறைகளுக்கு மட்டும் படிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் படிகளில் சில ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருவதற்காக அல்லாமல், ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருமாறு வழங்கப்பட்டுள்ளன.

படிகளில் ஒரு பகுதிதான் இந்த ஆண்டு கிடைக்கப்பெறுகின்றது. இந்த அனைத்துப் படிகள், சம்பள அதிகரிப்புகள், சலுகை அதிகரிப்புகளுடன் நாங்கள் எதிர்பார்க்கும்  2000 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவைச் செலவழிப்பதன் மூலம் எம்மால் பொருளாதாரத்தில் வளர்ச்சியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் எம்மால் மீண்டெழும் செலவுகளை 9% வரம்பிற்குள் தொடர்ந்தும் பேணிச் செல்வதன் மூலம் அல்லது அதற்குள்ளாகவே அதற்காகச் செலவிடக்கூடிய வரம்பினை அதிகரிக்க முடியும். 

 அதுவே அரசாங்கத்தின் இலக்காகும். எனவே, மேலதிக படிகளை வழங்க முடியுமாக இருந்தால் நாங்கள் வழங்குவோம். அனைத்தையும் ஒரே தடவையில் வழங்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment