ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சைகளின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாகத் தனக்கு அறிவிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கும், அடுத்த கட்டமாக ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகளுடன் நேற்று (13/11) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் முடிவில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“மாற்றுத்திறனாளிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முறைகள் குறித்து நேர்முகப் பரீட்சைகளை நடத்துபவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து எமக்கு அறிவிக்கவும். ஆட்சேர்ப்புகள் வெளிப்படைத் தன்மையுடனும், நியாயமாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதற்கு நாம் எமது உச்சக்கட்டத் தலையீட்டை மேற்கொள்கிறோம்” என்றார்.
“அதேவேளை, அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 17 ஆயிரம் பேர் நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது முதற்கட்டம் மட்டுமே. நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படும்.
ஆசிரியர்களை 2022ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டியுள்ளது. அதில் ஒரே விண்ணப்பதாரி பல பாடங்களுக்கும், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கும், சாதாரண தரம், உயர் தரம் ஆகிய பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்வது சற்றுச் சவாலான செயல்முறையாகும்.
அத்தெரிவுகளுக்கு அமைவாக, வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.