வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அமர்வின் போதே இந்தச் சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பாக 2014 செப்டம்பர் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 2178ஆம் இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அது தொடர்பான இதர ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி முதலாம் மதிப்பீட்டுக்காக இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 இலங்கைப் பிரஜையொருவர் அல்லது வெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையில் தங்கியிருக்கும் போதோ அல்லது வெளிநாடொன்றில் தவறிழைத்து அது அந்த நாட்டின் சட்டத்தின் கீழும் குற்றமாக அமையும் பட்சத்திலோ, இந்தச் சட்டத்தின் ஊடாக இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

 பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல், பங்குபற்றுதல் மற்றும் பயங்கரவாதப் பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் ஆகியன இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

 அதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து இந்தச் சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படவில்லை எனவும் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.

 விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலத்திற்குக் குழு அங்கீகாரம் வழங்கிய போதிலும், குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இதற்குத் தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்துள்ளார்.

 இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் ஆகியோருடன் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்

Share this Article
Leave a comment