இரு புதிய சட்டமூலங்களையும் உடனடியாக மீளப்பெறுங்கள் – சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் !

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அவை நிறைவேற்று அதிகாரத்திற்கு கைது மற்றும் தடுத்து வைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரங்களை வழங்குவதோடு, நீதித்துறை மேற்பார்வையையும் அடிப்படை உரிமைகளையும் பலவீனப்படுத்தும் எனவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவினால் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் ஆகியன சுதந்திரம், பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் பாரிய கவலைகளை எழுப்புகிறது.

பயங்கரவாதத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் எதிர்த்துப் போராடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால் சுயாதீனமான நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் அரசியலமைப்புப் பாதுகாப்புகளை வலுவிழக்கச் செய்வதற்கோ அல்லது தனிநபர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கோ வழிவகுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சட்ட ஏற்பாடுகளை நியாயமாக கொள்ள முடியாது.

1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கைக்கு வழங்கிய கசப்பான அனுபவங்கள், காணப்படுகையில் தற்போதைய சட்டமூலங்கள் போதுமான பாதுகாப்புகள் இன்றி விரிவான அதிகாரங்களை நிறைவேற்றுத்துறைக்கு வழங்குவதன் ஆபத்துகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருவதுடன், தொடர்ச்சியாக மாறுபட்ட அரசாங்கங்களின் கீழ் விசாரணையின்றி நீண்ட காலம் பிரஜைகளை தடுத்து வைக்கவும் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வரைவிலிருந்து கணிசமாக விலகிச் சென்றுள்ளது.

இக்குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் சானக்க டி சில்வா ஆகியோரை எமது சங்கம் பரிந்துரைத்திருந்தது. எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மீண்டும் எங்கள் குழுவின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை.

அந்த வகையில் தற்போதைய சட்டமூலத்தில் கட்டாய விளக்கமறியல், பிணை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நீதித்துறை அனுமதியின்றி தடுப்புக் காவலை நீட்டிக்க அனுமதிக்கும் ஏற்பாடுகள் ஆகியவை கவலைக்குரிய விடயங்களாக மாறியுள்ளன.

ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்குச் சிறப்பான சூழ்நிலைகள் காணப்பட்டால் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை பெற முடியும் என்ற நிலை உள்ளது. பலமான ஆதாரங்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் கூட இத்தகைய விதிகள் நீடித்த தடுப்புக்காவலுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

மேலும், ஒரு தடவையில் மூன்று மாதங்கள் வரை நடமாட்டம் மற்றும் சங்கங்களைக் கட்டுப்படுத்தும் தடை உத்தரவுகள், அமைப்புகளைத் தடை செய்வதற்கான விரிவாக்கப்பட்ட அதிகாரங்கள், துணைச் சட்டங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தின் பணிப்புரைகள் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலை உருவாக்க அனுமதிக்கும் ஏற்பாடுகள் தொடர்பிலும் கவலைகள் உள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டமூலங்களும் அரசியலமைப்புச் சவால்களை எழுப்பியுள்ளதுடன், அதன் பரந்த வரையறைகளும் தடுப்புக் காவல் அதிகாரங்களும் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அமைதியான போராட்டங்கள் உள்ளிட்ட நியாயமான செயற்பாடுகளை அடக்கப் பயன்படுத்தப்படலாம்.

நிறைவேற்று அதிகார உத்தரவுகளின் கீழ் ஒரு வருடம் வரை தடுத்து வைக்க அனுமதிக்கும் ஏற்பாடுகள், பிணைக் கட்டுப்பாடுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளும் விதிகள் ஆகியவை கரிசனைக்குரிய விடயங்கள் என்பதால் குறித்த சட்டமூலங்களுக்கு எதிரான நாம் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.

அத்தடன் இச்சட்டமூலங்கள் தொடர்பில் முறையான பொது மக்களின் கருத்துக்கணிப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆகவே குறித்த இரு சட்டமூலங்களை அரசாங்கம் முழுமையாக மீளப்பெறுவதோடு நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது.

Share this Article
Leave a comment