சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேகநபரால் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (03/10) டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அங்கு தனது உடலில் 4 பொதிகளாக்கி 996 கிராம் எடையுள்ள இத்தங்க நகைகளை மறைத்துக்கொண்டு வந்துள்ளார்.
பின்னர் இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக இப்பயணியும் அவரால் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, இன்று (04/10) அதிகாலை வரை இது குறித்து முறைப்படியான சுங்க விசாரணை நடத்தப்பட்டதுடன், இத்தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.