நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்பு 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் அளவும் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக நீரைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகச் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சிறுபோக விவசாய நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் விவசாய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிகளுக்கு எதிர்வரும் மாதங்களுக்குத் தேவையான நீர் கையிருப்பில் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தொடர்ச்சியான வறட்சி, அதிக வெப்பநிலை மற்றும் காற்று காரணமாக நீர் ஆவியாதல் அதிகரித்து வருவதால், கிடைக்கக்கூடிய நீர் வளத்தை விவசாயம் மற்றும் அன்றாட தேவைகளுக்குப் பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம் என நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.