பாடநூல்களை பழைய காகிதத்திற்கு விற்ற 5 பேர் விளக்கமறியலில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள், நேற்று (15/08) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

 அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த புத்தகத் தொகுதியை கொண்டு சென்ற லொறி சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதம் மற்றும் போத்தல் வியாபாரி ஒருவருக்கு விற்று 47,000 ரூபாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

 இச்சம்பவம் குறித்த மேல் விசாரணை பணிகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article
Leave a comment