பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் பிறந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு, மன்னர் சார்ல்ஸ் III, 2026 ஜூலை 7 ஆம் திகதி விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக ‘சர்’ (Sir) பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

உயர்கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைகள், குறிப்பாக கல்வியில் உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை முன்னேற்றிய தலைமைத்துவப் பங்களிப்பிற்காக, 2026 ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவ விருதுகள் பட்டியலில் அவர் இடம்பெற்றிருந்தார்.

பாரம்பரிய முறையில் நடைபெற்ற அந்த விழாவில், மன்னர் சார்ல்ஸ் III தனது வாளால்,  மண்டியிட்டு இருந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் இரு தோள்களையும் மெதுவாகத் தொட்டு, அதிகாரப்பூர்வமாக ‘சர்’ பட்டத்தை வழங்கினார்.

விருதைப் பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா,

“மன்னர் சார்ல்ஸிடமிருந்து இந்த உயரிய கௌரவத்தைப் பெறுவது எனக்கு மிகுந்த பெருமையும் நன்றியுணர்வும் அளிக்கிறது. எனது வெற்றிக்கு பங்களித்த என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கடந்த கால, தற்போதைய சக ஊழியர்கள் அனைவரின் முயற்சிக்கும் இந்த விருது அங்கீகாரமாகும்.

மேலும், இது பலருக்கும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் வளர்ந்த ஒரு சிறுவனாக இருந்து, இன்று அரச குடும்பத்தால் கௌரவிக்கப்படுவது உண்மையிலேயே ஆச்சரியமான பயணமாகும். கல்வியின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி  அது வழங்கும் வாய்ப்புகளுமே இதை சாத்தியமாக்கின.

அதனால், மற்றவர்களும் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை நீக்குவதில் நான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்” என்றார்.

பேராசிரியர் சர் நிஷான் கனகராஜாவின் இந்த கௌரவிப்பு, உலகத் தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், கல்வி, சமத்துவம் மற்றும் பொதுச் சேவைக்காக அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அர்ப்பணிப்புக்கான உயரிய அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.

Share this Article
Leave a comment