தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் ‘மாமலோடி சண்டவுன்ஸ்’ கிளப் அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்.
2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முக்கியக் காரணமாக இருந்த இவர், உயிரிழந்திருப்பது அந்நாட்டு கால்பந்து இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டவுன் நகரின் ஸ்காட்செக்லூஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாததால், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இளம் வயதிலேயே லீக் பட்டங்களையும், ஆபிரிக்க சம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்று, நாட்டின் மிகச்சிறந்த இளம் திறமையாளராக உருவெடுத்த ஜெய்டன் ஆடம்ஸின் மறைவுக்கு ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உள்ளிட்ட உலக கால்பந்து பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.