யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி. சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (23.03) பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இன்னும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை எதிர்காலத்தில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் தளபதியுடன் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.
அத்துடன், வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இத்தொடர்பாக, ஆளுநரின் தலைமையில் அண்மையில் மாகாணக் கல்விச் சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலை கட்டளைத் தளபதி பாராட்டியதுடன், மாணவர்கள் தேசிய மாணவர் படையணியில் இணைவதன் மூலம் ஒழுக்கம், நற்பழக்கவழக்கங்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் கேணல் டபிள்யூ.எம்.ஏ.எம். நிஸ்ஸங்க, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். சத்தியசீலன் மற்றும் ஆளுநரின் ஊடகச் செயலாளர் கு. டிலீப் அமுதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.