கனேடிய பிரஜைகளான இருவரால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் 25 வயதுடைய ஆண் ஒருவரும் 29 வயதுடைய பெண் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் செவ்வாய் (10/03) காலை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.