நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் (10/03) காலை பாராளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் , நெடுந்தீவு பிரதேச செயலர் ந.பிரபாகரன் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற இக்கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் , துறைசார்ந்த நிறுவனத் தலைவர்கள் , பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நெடுந்தீவு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நெடுந்தீவிலுள்ள சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நெடுந்தீவு பிரதான வீதியில், புனரமைக்க வேண்டிய அவசியநிலையில் மீதமாகவுள்ள பகுதி புனரமைப்புக்கான நிர்வாகரீதியான வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் திருத்த வேலை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நெடுந்தீவு கடற்போக்குவரத்துக்கான அரச படகுகள்தொடர்பிலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டுள்ளதுடன், திருமலையில் திருத்த வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ள வடதாரகை இன்னும் இரு மாதங்களுக்குள் சேவைக்கு வந்துவிடும் எனவும் நெடுந்தீவின் போக்குவரத்துகாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிகமாக படகொன்றினை குத்தகை அடிப்படையில் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்தொழில் சமாசத்தின் படகினை திருத்தம் செய்வதற்கான நிதியினை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி , சுகாதாரம், குடிநீர் மற்றும் தொழில் வளங்கள் தொடர்பிலும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் தொடர்பிலும் எடுத்துள்ள முடிவுகள் தெரிவிக்கப்பட்டதாகவும் , மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொடர்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தீர்மானித்த விடயங்களை அறிவிக்கும் ஒரு கூட்டமாக அமைந்திருந்ததாக பலரும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.