அதிவிசேட வர்த்தமானி வெளியீடு: 206 தனிநபர்கள், 16 அமைப்புகள் மீது அரசின் தடை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உட்பட தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா வெளியிட்டுள்ளார்.

1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புகளைப் பேணும் மற்றும் அவற்றை ஊக்குவிக்கும் அமைப்புகளைத் தடைசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் காலத்துக்குக் காலம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு வருகிறது. இந்தத் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, அரசாங்கத்தினால் கடந்த 6ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு, கனடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு, ‘சேவ் த பேர்ள்ஸ்’ உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதனுடன் தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, தருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம், சுப்பர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், ஜேசுராசா அமலதாஸ், விஸ்வநாதன் ருத்ரகுமரன், அப்பாத்துரை செந்தில் விநாயகம், சந்திரா வரதகுமார், வீரசிங்கம் நாகேஸ்வரன், நடராஜா சத்தியசீலன், அமிர்தலிங்கம் திலீபன், விநாயகமூர்த்தி மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் உட்பட மொத்தம் 206 தனிநபர்களின் பெயர்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இவ்வமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சேர்க்கப்பட்டதன் மூலம், அவர்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக்கள் நாட்டுக்குள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment