யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜனவரி 01) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.
மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டியதையடுத்து, மைதானத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 14ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பணிகள் காலதாமதமடைந்த நிலையில், தற்போது அவை மீண்டும் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மைதானம் அமையவிருக்கும் பகுதி நீரேந்து தன்மை கொண்ட பிரதேசமாகவும், வலசை பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வருகை தரும் பறவைகள் சரணாலயம் போன்ற பகுதியாகவும் உள்ளதால், இங்கு மைதானம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.