முல்லைத்தீவு சிறுமியின் மரணம்- நீதிகோரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29/12) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும்வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதிகிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.

தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன.

அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment