தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்ட விரோதமாக அபகரித்து ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகிறது. அதனை மேற்கொள்ளுவது சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையும், நாட்டை இன, மத பேதமின்றிப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகளும், அனைத்து மக்களையும் சமனாகக் கருதி ஆட்சி புரிய வேண்டிய அரசும்தான். சிறீலங்காவில் இருப்பது ஒரு இனவாட்சியே (Ethnocracy) அன்றி ஜனநாயக ஆட்சி அல்ல என்பதை இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது. இந்த விவகாரம் எமக்குப் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்துகிறது.
முதலாவதாக, இந்தச் செயற்பாடு ஒரு சட்டவிரோதச் செயற்பாடாகும். தனியாருக்குச் சொந்தமான காணிகளை அரசும், அரசின் அங்கங்களான பாதுகாப்புப் படை, காவற்துறை என்பனவும், முதன்மை மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதத்தின் மத பீடங்களும் இணைந்து ஆக்கிரமித்துள்ளன. தமது சொந்தச் சட்டங்களையே மிதித்துப் புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும்.
இரண்டாவதாக இந்த விவகாரம் அரசியல் யாப்பிற்கு முரணானதாகும். அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள தனது மக்களின் உரிமைகளை மறுதலித்து, அவர்களது சொத்துக்களை எவ்வித முறைமைக்கும் உட்படுத்தாது அரசு ஆக்கிரமிப்பது அரசியல் யாப்பிற்கும் முரணானது.
மூன்றாவதாக இது ஒரு ஜனநாயக மீறலாகும்.அரசிடம் பாரதீனப் படுத்தப் படாத, தனது நாட்டு மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தொடர்பான இறைமையை ஒரு அரசு திட்டமிட்டுத் தனது கைகளில் எடுத்துள்ளது. சொந்த மக்களின் சொத்துக்களையே, எவ்விதமான அரசாட்சி நடைமுறைகளுமற்றுக் கையகப்படுத்துவது மன்னராட்சி நடைமுறைக்கு ஒத்தது. நவீன ஜனநாயக அரசுகளில் இந்த நடைமுறை இருக்க முடியாது.
நான்காவதாக இது மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும். அரசினதும், அரசின் வன்முறை இயந்திரங்களான பாதுகாப்புப் படைகள், காவற்துறை என்பவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் பொழுது அதனைக் கண்டித்து எதிர்ப்பை வெளிக் காட்டுவது மக்களின் அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரத்தில் தனது மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அரசு தன் வன் கரங்களால் நசுக்கியுள்ளது.
ஐந்தாவதாக ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் தனது கையில் எடுத்து அதனைப் பிற தேசிய இனங்களை அடக்கும் ஆயுதமாகப் பாவிக்கும் இனவாட்சிச் செயற்பாடுகளுக்கு இந்த விவகாரம் ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். உள்நாட்டுச் சட்ட திட்டங்களும் , பொறிமுறைகளும் எந்த விதத்திலும் நீதியை நிலை நிறுத்தமுடியாதவை எனும் வரலாற்றனுபவத்திற்கான மிகச் சமீபத்திய சான்றாக தையிட்டி விவகாரம் விளங்குகிறது.
முரண்பாடுகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி, ஒரு அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான சில தனிநபர்களின் உரிமையை, நீதிமன்றத்தின் உத்தரவின் படி மறுக்கும் ஏற்பாடுகளைக் காவற்துறை செய்திருந்தது. எனினும் பௌத்த மதத்தை பின்பற்றும் சாதாரண குடிமக்கள் அந்தப் பிரதேசத்தில் ஒரு சமூகமாக வாழவில்லை என்பதால் தையிட்டி விவகாரத்தில் அவ்வாறான முரண்பாடுகளும் பதட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்படாது என்பது வெள்ளிடைமலை. ஏனெனில் அப்பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய அரசுப் படைகளே நிறைந்திருக்கிறார்கள்.
முரண்நகையாக , கூறப்பட்ட காரணங்களுக்கு மாறாக, காவற்துறையின் பலப் பிரயோகமும், மிகை வன்முறைப் பிரயோகமும் தான் உடனடிப் பதட்டத்தையும், நீண்ட கால வடுக்களையும், முரண்பாடுகளின் தீவிரத் தன்மையையும் அதிகரித்துள்ளது. இது சிறீலங்கா அரசுக் கட்டமைப்பு, பெருந்தேசிய இனக் குரோத மயப்பட்டுள்ளதை வெளிப்படையாகப் பறை சாற்றுகிறது.
தமது உடமைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, உரிமைகள் நசுக்கப்பட்டு, உயிர்கள் காவு கொள்ளப்பட்டுத் தமிழ் மக்கள் பெருந்தேசியவாத மனநிலையிலுள்ள மக்களாலும், அவர்களது அரசினாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதற்கு எதிராக வன்முறையற்ற அறவழியில் தமது குரல்களை வெளிப்படுத்தினார்கள். அதனைக் கடுமையான வன்முறையால் அரசு காலங்காலமாக அடக்கிவருகிறது . இதுவே சிறிலங்காவின் இன முரண்பாடு கடந்த காலங்களில் வன்முறை வழிக்குச் செல்வதற்குக் காரணமாக அமைந்தது. அதன் விளைவாக மூன்று தசாப்த கால யுத்தமும் இனவழிப்பும் நிகழ்ந்தன. கடந்த காலங்களிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளாத சிங்கள பேரினவாதமும் அதன் செயற்பாட்டுப் பொறிமுறையான அரசுக் கட்டமைப்பும் மீண்டும் அதே வழியில் பயணிக்க முடிவெடுத்திருப்பது இந்த நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் எந்த வகையிலும் ஏற்படுத்தாதுஎன்பதை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
இதன் பின்னணியில் இம்மாதம் 20 ஆம் தேதி தையிட்டி சட்டவிரோத, ஜனநாயக விரோத பௌத்த விகாரைக்கு எதிராகவும், தமது நில உரிமையை நிலைநாட்டக் கோரியும் நடந்த அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கிய சிறீலங்கா அரசினதும், தற்போதைய அரசாங்கத்தினதும், அதன் கருவிகளான காவற்துறையினதும் கருத்தியலையும் செயற்பாடுகளையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த அறவழிச் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆன்மீகத் தலைவரும் துறவியுமான தவத்திரு வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், என அனைவரின் மீதும் பிரயோகிக்கப்பட்ட வன்முறையையும் , அவர்களின் கைதையும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. இவற்றைச் சிறீலங்காவின் அமைதிக்கு நிரந்தரப் பங்கம் விளைவிக்கும் சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதற்காக அரசு மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகிறோம்.
இந்த விவகாரத்தைக் கட்சி அரசியற் பிரச்சினையாகவும், அநீதிகளுக்கு எதிரான மக்களின் செயற்பாடுகளை சட்ட/சட்டவிரோதச் செயற்பாடுகளாகக் குறுக்கி, அதன் மூல காரணமாக இருக்கும் சிங்களப் பெருந்தேசிய மயமாக்கப்பட்டுள்ள அரசுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு, தனது கைகளில் எடுத்திருக்கும் தற்போதைய அரசாங்கமும் அதன் அரசுத் தலைவரும், தாமும் மகா வம்ச மனநிலையின் அரசியல் வாரிசுகளே என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஒற்றை மத மேலாதிக்கத்தையும், ஒரு தேசிய இனத்தின் மேலாண்மையையும் உறுதிப்படுத்தும் ஒற்றையாட்சி (ஏக்கிய இராச்சிய) பல தேசிய இனங்களின் தாயகமாக உள்ள ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது அல்ல என்பதை மீள வலியுறுத்தி, மற்றைய தேசிய இனத்தின் மதத்தலைவர்கள், சமூகத் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவரும் அமைதி வழியில் போராடிய வேளையில், திட்டமிட்டு வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்ததை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்
1. சமூக விஞ்ஞான ஆய்வு மையம்
2. குரலற்றவர்களின் குரல் அமைப்பு
3. கிராமிய உழைப்பாளர் சங்கம்
4.மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், யாழ்ப்பாணம்
5. வடமாகாண காணிகள் உரிமைக்கான மக்கள் அமைப்பு
6. தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
7. தமிழ் சிவில் சமூக அமையம்
8. பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்