அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே சிறந்த பிரதேசமாக திகழ்வதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்
அண்மையில் அனலைதீவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார், அவர் மேலும் தனது உரையில்…
சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இவ்வருடத்திற்குரிய இறுதி நிகழ்வாக இவ் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய பல பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனவும், குறிப்பாக தீவுப்பகுதி நோக்கிய பயணம் வெற்றியளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும் தீவுப் பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கியதன் அடிப்படையில் இவ் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தீவுப்பகுதி மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவும், இலங்கையிலேயே கடல்கடந்த பிரதேசங்களையும் கொண்ட மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகிறது எனவும், குறிப்பாக நெடுந்தீவு, எழுவைதீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு மக்கள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைப்பாடுகளை உடையவர்களாக காணப்படுகின்றனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் புலம்பெயர்ந்த பிரதேசத்தில் நல்ல நிலைமைகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் எனவும், இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் தங்களின் விடாமுயற்சி, அயராத உழைப்பின் பயனாக பொருளாதார ரீதியாக பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர் எனவும், இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பொருத்தமான தளபாடம் மின்மை, பொருத்தமான ஆசிரிய ஆளணி வளமின்மை என பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும், ஒரு மனிதனை முழு மனிதனாக ஆக்கும் கல்விச்சாலைகள் முன்னேற்றப்பபட வேண்டியவை எனவும், ஆதலால் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் இதற்கான தமது அர்ப்பணிப்பை மேற்கொள்வார்களாக இருந்தால் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், நெடுஞ்சாலை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தீவுப்பகுதி வீதி புனரமைப்பிற்காக ரூபா 250 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் எனவும், மிக கஷ்டத்தின் மத்தியில் கடல் கடந்த தீவுக்கான திட்டங்களை நிறைவேற்ற கௌரவ தவிசாளர், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரதும் ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தில் ரூபா 40 மில்லியன் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்காக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், எமது மாவட்டத்தில் கடமையாற்ற கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம் எமக்கு கடவுளால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் எனவும், இந்த வருடம் இன்றைய நாளில் அரசாங்க அதிபராக கடமையாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது எனவும், அதேபோல் சகல உத்தியோகத்தர்களுக்கும்கிடைத்த இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கே கஷ்டப்பட்ட, தேவைப்பாடுடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே ஒரு சிறந்த பிரதேசமாக காணப்படுகிறது எனவும், அந்த வகையில் இங்குள்ள பிள்ளைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயமாக மிளிர வேண்டும் எனவும், எனவே அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மூலமாக ஊக்குவிப்பை வழங்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் எனவும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் எனவும், எமக்கு கிடைத்த உதவிப் பொருட்களை தீவுப் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைத்திருந்ததாகவும், வறுமையானவர்களை ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான சமுதாயமாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது எனவும், இந் நடமாடும் சேவை மூலம் அதனை ஓரளவு நிவர்த்தி செய்ய முயற்சித்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இங்கு வந்து இங்குள்ளவர்களுக்கு சேவையாற்றி செல்வதன் மூலம் இங்குள்ள அனைவரும் தமது தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியுமென தெரிவித்ததுடன், அனலைதீவுப் பிரதேச வளர்ச்சியில் தொடர்ந்து பங்கெடுப்போம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.