கரைதுறைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று (22/12)  திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2025 ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தவிசாளராக கடமையாற்றிய சி.லோகேஸ்வரன் கட்சியின் நடவடிக்கை காரணமாக நவம்பர் மாத இறுதிப்பகுதியில் தனது பதவியினை இராஜினாமா செய்வதாக உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தினை தொடர்ந்து உபதவிசாளர் சபையினை கொண்டு நடாத்தி வந்திருந்தார்.

இந்த நிலையில் புதிய தவிசாளரை தேர்தெடுப்பது தொடர்பில் நேற்று (22/12) வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில்  தெரிவு கூட்டம் இடம்பெற்ற நிலையில் தவிசாளர் பதவி போட்டிக்கு இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்மைப்புள்ளை பபுல்ராஜ், மிக்கேற்பிள்ளை ஜோன்சன் மோகனராஜா ஆகிய முவரும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் மற்றும் தொம்மைப்புள்ளை பபுல்ராஜ் இடையில் போட்டி நிலவியது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளை பெற்று புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article