யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் நேற்று (21/12) மாலை நடந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளும், இளைஞர்கள் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய புத்தூர் பகுதியை சேர்ந்த 25 வயதான ஜெகநாதன் வினோஜன் எனும் இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
குறித்த இளைஞனுடன் பயணித்த மற்றைய இளைஞனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த, தாய் – தந்தை மற்றும் அவர்களின் சிறிய மகன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மற்றொரு இளைஞரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.