யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் ஆரங்காற்றுகை மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தின் இசைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.சுகன்யா அரவிந்தன் இசைத்துறைப் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்
பேராசிரியர் கலாநிதி.சுகன்யா அவர்கள் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர்.
தனது ஏழாவது வயதிலேயே முதலாவது அரங்கப் பிரவேசத்தினை மேற்கொண்டுள்ளார். இசையை தனது தாயாரான சங்கீதவித்துவான் திருமதி சந்திரமதி சிவானந்தன் அவர்களிடம் பயின்று சிறப்புத் தேர்ச்சிக்காக இலங்கையின் தலைசிறந்த இசை விற்பன்னரும் தாயாரின் குருவுமாகிய அமரர் சங்கீதபூஷணம் திரு லயனல் திலகநாயகம் போல் அவர்களிடம் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார்.
இசை மற்றும் நடனம் ஆகிய இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் சுகன்யா. யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இந்துநாகரிகம், நாடகமும் அரங்கியலும், சமூகவியல் ஆகிய துறைகளில் கற்றதோடு சமூகவியல்துறையை சிறப்புத்துறையாகத் தெரிவு செய்து இளநிலைபட்டப்படிப்பினை சிறப்பாகப் பூர்த்தி செய்துள்ளார்.
கலாநிதி சுகன்யா. யாழ் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் சிறப்புக்கலைப்பட்டப்படிப்பை பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் விரிவுரையாளராக கடந்த 10 ஆண்டுகளாகக் கடைமையாற்றி வருகிறார். வயலின் வாத்தியக் கலைஞரான சங்கீதவித்துவான் அமரர் ஆர்.எஸ்.கேசவமூர்த்தி அவர்களிடம் முறையாக பயின்று குருவுடன் பல இசைவிழா மேடைகளிலே வயலின் இசைக்கச்சேரிகள் சிறப்பாக நிகழத்தியிருக்கின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற பரீட்சைகளிலே சிறப்பாகச் சித்தியடைந்து அச்சபையினால் வழங்கப்படுகின்ற கலாவித்தகர் பட்டத்தினை இரண்டு துறைகளிலும் பெற்றிருக்கின்றார்
கலையின் மீதிருந்த ஈடுபாடு காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு இந்திய அரசின் கலாசார உறவுகளின் அமைப்பினரால் வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவாகி சென்னைப் பல்கலைக்கழகத்திலே முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை இலங்கை கர்நாடக இசைக்கலை வளர்ச்சியும் மேம்பாடும் என்ற பொருளில் சிறந்த முறையிலே நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது