யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பயணியர் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (15/12) நடைபெற்றது.
இவ்விழாவில் இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், யாழ்ப்பாண விமான நிலையத்தின் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் இணைந்து, சர்வமத வழிபாடுகளுடன் அடிக்கல்லை நாட்டினர்.
இந்த நிகழ்வில் விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள், சுங்கத் துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள், விமானப் பயணிகள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய பயணியர் முனையம் சுமார் 700 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளதாகவும், இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய முனையத்தின் மூலம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைத்திறன் அதிகரிப்பதோடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.