ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான அடிபட்ட காயம் காரணமாக அவர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சிடி ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள்இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நரம்பு சத்திர மருத்துவர்க மூலம் உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, உயிரை காக்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

ஆனால், மருத்துவர், தாதியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் முழு முயற்சியையும் எடுத்தபோதிலும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாக குறைந்து, இறுதியில் மூளை இறப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்த இக்கட்டான நிலையிலும் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

இதனிடையே இலங்கையில் சிறுநீரக செயலிழப்பால் மாற்றுச் சிறுநீரகத்திற்காக பலர் உயிர்ப்போராட்டத்தில் இருக்கின்றனர். அந்தநிலையில், மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.

இது ஒரு சிக்கலான பல மணித்தியாலங்கள் மிகவும் கவனமாக செய்ய வேண்டிய சத்திர சிகிச்சை இவற்றை வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு வெற்றிகரமாக செய்து முடித்தது.

இந்த மனிதாபிமானச் செயல் மூலம் இருவர் தங்கள் வாழ்வை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அமரர் ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஒரு இளம் உயிர் துன்பகரமான முறையில் முடிவடைந்தாலும், அவரது குடும்பத்தின் உயர்ந்த முடிவின் காரணமாக இரண்டு பேருக்கு புதிய வாழ்வாதாரம் வழங்கப்பட்டுள்ளமை மனதை உருக்கும் வகையில் மனிதநேயத்தின் பெருமையை மீண்டும் உணர்த்துகிறது.

Share this Article