வெள்ளத்தால் நாட்டில் உருவான கடுமையான அனர்த்தநிலையின் நடுவிலும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை கொள்ளையிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்த நிலையைக் கட்டுப்படுத்த, எமது மீனவர்கள் மற்றும் அமைச்சு இணைந்து ஒரு விசேட ‘ஒப்பரேஷனை’ முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், எமது மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கும் நிவாரண உதவிகள் எமக்கு ஒரு ஆறுதலாக உள்ளது.
ஆனால், அதே சமயம் இந்திய மீனவர்கள் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து எமது கடற்பரப்புக்குள் நுழைந்து வளங்களை சுரண்டி வருகின்றனர். இது நியாயமற்ற செயற்பாடாகும்.
இந்த பிரச்சினை குறித்து பலமுறை பல தரப்புகளுடன் விவாதித்தபோதிலும், இதுவரை பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக, இந்திய மீனவர்களின் அத்துமீறல் இன்னும் அதிகரித்து வருகிறது.
“தொப்புள்கொடி உறவு” என கூறப்படுகின்ற இலங்கை–இந்தியா உறவின் பெயரில் எமது வளங்களை அள்ளிச் செல்லுவது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் தலையிட்டு, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
அதேபோல, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியும் தமிழ்நாடு அரசுடன் உரையாடி, எமது கடல் வளங்கள் பாதுகாப்பைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நீளும் பட்சத்தில், அதைத் தடுக்கும் நோக்கில் அமைச்சும் மீனவர்களும் இணைந்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் எச்சரித்தார்.