கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர்21) நேரில் சென்று பார்வையிட்டார்.
இரணைமடுக் குளம் வான்பாயும் காலங்களில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கால், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைவதும் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்தது. கனகராயன் ஆறு முறையாகப் புனரமைக்கப்படாமையே இதற்குக் காரணமாக அமைந்திருந்தது.
இதற்குத் தீர்வாக, கடந்த ஆண்டு மத்திய விவசாய அமைச்சின் ஊடாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆற்றின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இவ்வருடம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து 16.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியினூடாக வெலிகண்டல் சந்தியிலிருந்து கண்டாவளை நெற்களஞ்சியம் வரையிலான சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு, 10 அடிக்கு உட்பட்டதாகவிருக்கும் ஆற்றின் அகலத்தை 30 அடி வரையில் புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் களப் பயணத்தில் ஆளுநருடன் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலர் த.பிருந்தாகரன், கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் க.கருணாநிதி மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.