வாய்பேச முடியாத இளம் பெண்ணை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான வாய்பேச முடியாத பெண் ஒருவர், சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், நேற்றுமுந்தினம் (ஒக். 14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் புகார் செய்திருந்தனர்.
புகாருக்குப் பின் பொலிசாரின் நடவடிக்கையிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த சந்தேகநபர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய கொன்சபத்து அதிகாரி ஹரிதாஸ் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நேற்று (ஒக். 15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றம் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.