ஸ்டாலினால் திறக்கப்படவுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

வேலூர் – மேல்மொணவூர் முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்புகளை சிறுபான்மையினா் மற்றும் அயலக வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் நேற்று முன்தினம் (செப்ரெம்பர் 14) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அயலக வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆரம்பித்து வைத்தாா்.

இந்த முகாமில் மாத்திரம் 11 கோடி ரூபாய் மதிப்பில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.அதன்படி, தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்துவைத்து மேல்மொணவூா் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களிடம் புதிய குடியிருப்புகளுக்கான திறப்புகளையும் வழங்க உள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு முதல் கட்டமாக 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

இரண்டாம் கட்டமாகவும் வீடுகள் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக இந்தாண்டு 3,700 வீடுகள் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட உள்ளன. அடிப்படை வசதி கட்டமைப்புகளுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

Share this Article