2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபாய் வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk இல், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebookcom/president.fund ஐ like அல்லது follow செய்யுமாறும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.
மேலும், தரம் 1 முதல் தரம் 11 வரை பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது முடிவடைந்துள்ளதுடன், புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றோரின் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வலய மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கவுள்ளது.
இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புலமைப்பரிசில் தொகை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.