3000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – அரசின் கல்விக் கொள்கைக்கு குமார் குணரத்தினம் கடும் விமர்சனம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரசாங்கம் 3000 கிராமப்புறப் பாடசாலைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாக குமார் குணரத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், கல்விச்செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

உலக வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலவசக் கல்வியை வர்த்தகமயப்படுத்தும் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றும், அதன்படி 3000 பாடசாலைகள் மூடப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

அத்துடன், அரச மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

76 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, முந்தைய ஆட்சிகளின் அதே பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்துள்ள நிபந்தனைகளால் பொதுமக்கள் மீது அதிக வரிச்சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளை பெருந்தோட்டத் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மின்சாரக் கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் பாதிக்கப்படும் சூழலில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

Share this Article