மாகாண மட்டப் போட்டிகளில் பங்கு பற்றி மடு வலயத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகள் ,
பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் ) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
அடம்பன் நகர் பகுதியில் இருந்து இவர்கள் பேண்ட் வாத்திய இசை முழங்க பாடசாலை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ,இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நடைபெற்றுமுடிந்த வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் எறிபந்து போட்டியில் மடு வலயத்திலிருந்து மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலய 17 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் 20 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் பங்குபற்றியிருந்தன. இப்போட்டியானது கடந்த 13,14 ஆகிய திகதிகளில் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 20 வயது ஆண்கள் முதலாம் இடத்தினையும், 17 வயது பெண்கள் இரண்டாம் இடத்தினையும், 17 வயது ஆண்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
மடு வலயம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில் பாடசாலை ஒன்றிலிருந்து ஒரே குழு விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி வடமாகாணத்தில் பலம்பொருந்திய பல அணிகளை தோற்கடித்து மூன்று அணிகள் பதக்கங்களை பெற்றுக்கொண்டமை பாடசாலைக்கும் மடு வலயத்திற்கும் ஒர் வரலாற்றுச் சாதனையாகும்.