2029-க்குள் இலங்கையில் அதிவேக இணைய வசதி!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன தலைமையில் கடந்த 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார்.

இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார்.

இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்விமனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது.

அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Share this Article