2026ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (மார்ச் 24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணைய வழியாகப் பெறப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், தமது பாடசாலை அதிபர் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என்பதால், குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.