12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை அரசாங்கம் முன்வைத்துள்ள நிலையில், அதனுடன் இணைந்து சமூக ஊடகப் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த அல்லது தடை விதிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் காரணமாக ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை எதிர்கொள்வதற்காக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சமீபத்தில் அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறினார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பான 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவற்றில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட வரம்பிற்குள் அடங்கும் 8,514 முறைப்பாடுகளும், அதன் நேரடி அதிகார எல்லைக்குள் வராத 1,941 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
கடந்த ஆண்டு பதிவான முறைப்பாடுகளில்:
பாலியல் துன்புறுத்தல் – 545
கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் – 231
இளம் வயது கர்ப்பம் – 79
கருக்கலைப்பு – 03
சிறுவர் திருமணம் – 09
பாலியல் வல்லுறவு – 38
சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறை – 150
தற்கொலை முயற்சி – 20
மேலும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை விட்டு பெற்றோர் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் கடந்த ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.