யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, ‘நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ்.ஐ.எஸ் ) அழைக்கிறோம்.
யார் துணைவேந்தராக வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் கேக்கிறோம்’ என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
துணைவேந்தர் தெரிவுக்கான நாள் நெருங்கிவரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்று பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர்.