எழுவதீவு முருக வேல் வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று வியாழக்கிழமை (29.09.2022) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் திரு.சி.கயூரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் தீவக கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ஞானசீலன், தீவக கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.செல்வக்குமார், யா/ எழுவைதீவு றோ.க.த.க வித்தியாலய அதிபர் திரு. கொலின்ஸ் மற்றும் எழுவைதீவு முத்தன்காடு முருகன் ஆலய பூசகர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுணுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக மேற்படி மாதிரி சந்தை நிகழ்வானது சரியான திட்டமிடலுடன் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.
குறித்த சந்தையில் மாணவர்கள் காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள், குளிர்பானங்கள் மற்றும் பலசரக்கு பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை கிராம மக்களும் மாணவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
பாடசாலை மாணவர்களின் குறித்த செயற்பாடுகளுக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கூடுதல் ஆதரவை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்ததுடன் சந்தை என்ற உணர்வினை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.