வேலணை – அராலி சந்தி பகுதியில் நவீன வசதிகள் கொண்ட பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான இடத்தை வழங்கும் திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை தொடர்புடைய துறைசார் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்த கள ஆய்வு நேற்று (ஓகஸ்ட் 04) வேலணை பிரதேச சபையின் கோரிக்கையை அடுத்து, சபையின் தவிசாளர், செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரி மற்றும் பிற துறைசார் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகார எல்லைக்குள் உள்ள அராலி சந்தி பகுதியில் காணப்படும் அரச நிலப்பரப்பை, வெறும் வேலணை பிரதேசத்துக்கே அல்லாது, தீவக மொத்த விளையாட்டு துறையின் முன்னேற்றத்துக்காக, சில நிபந்தனைகளுடன் வழங்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் அவற்றுக்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் துறைசார் வழிமுறைகளுக்கமைவாக தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்க வேண்டும் என வேலணை பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபை கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து பொதுமைதானம் அமைப்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது தேவையான ஒப்புதல்களும், நிலப்பரப்பும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
இதன் கீழ், சுமார் 4 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்குடன் நவீன கட்டமைப்புகள் கொண்ட மைதான வளாகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலப்பரப்பு நீரேந்து பகுதியாக உள்ளதால், நீர் சேகரிப்பு செயல்முறைகள் பாதிக்கப்படாதவாறு திட்டமிடல் செய்யப்பட்டு, அவ்வகையில் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும், பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.